தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மெத்தனமாக செய்யப்படுகின்றன

தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் மெத்தனமாக செய்யப்படுகின்றன என்று ஆலோசனை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-07-12 18:09 GMT

தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே வேலூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மெத்தனமாக செய்யப்படுகின்றன என்று ஆலோசனை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.963 கோடி மதிப்பில் 52 வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் 30 பணிகள் ரூ.512 கோடியில் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

சாலை அமைத்தவர் மீது வழக்கு

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து அங்கு அமைக்கப்பட்ட சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட கூடாது. சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் வாகனங்கள் சிக்கி கொண்டால் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை பாயும். மேலும் அவர்களின் அலுவலக மின் இணைப்பு துண்டித்து, சீல் வைக்கப்படும்.

அம்ருத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டும்.

புதிய குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே குடிநீர் வரி வசூலிக்க வேண்டும். தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே மோட்டார் சைக்கிள், ஜூப்பை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர். சாலை அமைத்தவர் மீது கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. பேசியதாவது:-

ஒப்பந்ததாரருக்கு அபராதம்

மாநகராட்சி பகுதியில் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பணிகளை முடிக்காமல் மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வரும் சமயத்தில் மாநகராட்சி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஜூப்பை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு கடும் அபராதம் விதித்து, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற தவறுகளை ஒப்பந்ததாரர்கள் இனிமேல் செய்ய கூடாது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.விற்கு கெட்ட பெயர்

கூட்டத்தில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை கிடப்பில் போடுவதால் அந்த பகுதி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே கடந்த 5 ஆண்டுகள் போல் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 வார்டுகள் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ளன. இதில் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக மீண்டும் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்கக்கூடாது. அந்த பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். எனவே அந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம். ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை தோண்டி மீண்டும் குழாய் பதித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். விருப்பாட்சிபுரத்தில் 5 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாமல் உள்ளது. பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்காததால் மக்கள் மத்தியில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.விற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அனைத்து பணிகளையும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

மெத்தனமாக நடக்கும் பணிகள்

கூட்டத்தில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அனைத்து பணிகளையும் அ.தி.மு.க.வினர் தான் டெண்டர் எடுத்துள்ளனர். இந்த பணிகள் தி.மு.க. ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே அனைத்து பணிகளும் மெத்தனமாக நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பல பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சரியாக குடிநீர் வழங்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவற்றை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் முடிவடையவில்லை என்று பொதுமக்கள் பேசி வருகிறார்கள். எனவே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்றார்.

இதில், வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், என்ஜினீயர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர்கள், உதவி என்ஜினீயர்கள், மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்