மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி
மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக கால்நடை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக கால்நடை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை காக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-
தற்போது மழைக்காலம் என்பதால் ஈ, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இந்த நோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 25 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப் பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் 135 கால்நடை மருந்தகங்கள், 8 கால்நடை மருத்துவமனைகள், 50 கிளை நிலையங்கள், மற்றும் பன்னோக்கு கால்நடை மருத்துவமனையிலும் போடப்பட்டு வருகிறது.
இது தவிர சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்களிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மூலிகை மருத்துவம்
மேலும் மூலிகை மருத்துவம் குறித்த தகவல்கள் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
பெரியம்மை நோய் அறிகுறி உள்ள மாடுகளுக்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு, தேவையான வெல்லம் ஆகிய அனைத்தையும் அரைத்து முதல் நாள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும், 2-வது நாள் முதல் ஒரு நாளைக்கு 3 வேளை என 2 வாரங்களுக்கு மாடுகளுக்கு கொடுத்து வர பெரியம்மை நோய் குணமாகும்.
பெரியம்மையால் ஏற்படும் கொப்புளங்களுக்கு குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, 10 பல் பூண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, துளசி இலை ஒரு கைப்பிடி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 500 மில்லி, மஞ்சள் தூள் 20 கிராம், மருதாணி இலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆறவிட்டு காயங்களை சுத்தப்படுத்தி மருந்தை தடவி வர புண் விரைவில் ஆறும்.
இவ்வாறு அவர் கூறினார்.