அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-
உலகச் சிக்கன நாள் 30.10.2023 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதை குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.
"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்" என்று அய்யன் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கை கெடும். எனவே சிக்கனமும் சேமிப்பும் மிக அவசியம். இந்த வகையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இவை சேமிப்பவர்களின் குடும்பத்திற்குத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகின்றன.
மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப்பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. "சிறுகக் கட்டிப் பெருக வாழ்" என்னும் பொன்மொழிக்கேற்ப, பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சுய தொழில் புரிவோர், மகளிர் போன்ற அனைவரும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.