அருள்புரம்
திருப்பூர் மாவட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளார்கள். தற்பொழுது நோய் தாக்குதல் மற்றும் விலை குறைவால் சின்ன வெங்காயம் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது குறித்து சின்ன வெங்காயம் நடவு செய்துள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது:
ஒரு ஏக்கருக்கு உழுவதற்கு 7000ரூபாய் . விதை வெங்காயம் 500கிலோ தேவைப்படுகிறது.ஒரு கிலோ விதை வெங்காயம் 70ரூபாய். அதனை நடவு செய்ய ஏக்கருக்கு 5000 ரூபாயும். மருந்து மற்றும் உரத்திற்கு 25000 ரூபாயும் களையெடுக்க ஏக்கருக்கு 10000 ரூபாயும் . சின்ன வெங்காயம் எடுப்பதற்கு ஏக்கருக்கு 6000ரூபாயும் .அதனை அறிவதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 7டன் கிடைக்கும். ஆனால் தற்பொழுது 4 முதல் 5 டன் வரை மட்டுமே கிடைக்கிறது. 40ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 25ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீருடன் கூறினார். மேலும் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் இனி சின்ன வெங்காயம் நடவு செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோன். என்று கூறினார்.