மாம்பலம் ரெயில் நிலையம் - தியாகராயநகர் பஸ் நிலையம் இடையே பாதசாரிகளை பரவசப்படுத்த வரும் ஆகாய நடை மேம்பாலம்
சென்னையில் மாம்பலம் ரெயில் நிலையம் - தியாகராயநகர் பஸ் நிலையம் இடையே பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 'லிப்ட்', 'எஸ்கலேட்டர்' வசதிகளுடன் இந்த பாலம் கலக்கலாக பயன்பாட்டுக்கு வருகிறது.;
பாதசாரிகளின் பரிதவிப்பு
சென்னை நகரின் 'குட்டி வணிக தீவு' தியாகராயநகர் என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னையின் இதய பகுதியாக திகழும் தியாகராயநகரில் ஏராளமான அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் நிறைந்திருக்கின்றன. தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதிகளில் ஏராளமான கடைவீதிகளும் இருக்கின்றன. இதனால் வர்த்தக ரீதியாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் மக்கள் ஏராளமானோர் வந்து போகிறார்கள். உதாரணமாக, ரங்கநாதன் தெருவையே சொல்லலாம். 'எள் போட்டால் எள் விழாது' என்று சொல்லக்கூடிய அளவுக்கு எந்நேரமும் அங்கு மக்கள் நெருக்கடியிலேயே பயணம் செய்வதை பார்க்கலாம்.
குறிப்பாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால், 'அய்யய்யோ...' என்று அலறும் அளவுக்கு பாதசாரிகள் தவித்து போவதுண்டு. கூட்ட நெரிசல், அதற்கிடையில் வரும் வாகனங்கள் என பல இடர்பாடுகளை கடந்துதான் செல்லவேண்டும். குறுக்குவழியில் செல்ல மார்க்கெட் பாதையை தேர்வு செய்தாலும் அங்கேயும் இதே கூட்ட நெரிசல். போதாக்குறைக்கு அவ்வப்போது உலா வரும் மாடுகள் தொல்லையும் கூட. இதனால் தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பாதசாரிகள் திக்குமுக்காடியே சென்று வந்தார்கள்.
ஆகாய நடை மேம்பாலம்
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை பொலிவூட்டும் அடையாளமாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் ஒரு அங்கமாக தியாகராயநகரில் பாதசாரிகள் தவிப்பை போக்கும் வகையில் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு நெரிசலின்றி செல்லும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
அதன்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக ராட்சத தூண்கள் எழுப்பப்பட்டு, அதன்மீது 4 மீட்டர் அகலத்தில், 600 மீட்டர் நீளத்தில் ராட்சத இரும்பு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரும்பு பாலம் மேட்லி சாலை வழியாக ரெயில்வே பார்டர் சாலை கடந்து ரெயில் நிலையத்தை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேற்கூரை அமைக்கும் பணிகள் முழுமையடைந்து விட்ட நிலையில் பாதை வழித்தடத்தில் 'டைல்ஸ்' கற்கள் பொருத்துதல், இணைப்பு வழித்தடம் முழுமையடைதல் போன்ற பணிகள் தற்போது வேகவேகமாக நடந்து வருகின்றன.
'லிப்ட்', 'எஸ்கலேட்டர்' வசதிகள்
பாதசாரிகள் வசதிக்காக தியாகராயநகர் பஸ் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' வசதியும், மாம்பலம் ரெயில் நிலைய வளாகத்தில் 'லிப்ட்' வசதியும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. மாம்பலம் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 'எஸ்கலேட்டர்' வசதி (ரெயில்வேக்கு சொந்தமானது) இருக்கிறது. இதுதவிர உஸ்மான் சாலையில் இருந்து வரும் பாதசாரிகள் வசதிக்காக தியாகராயநகர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே 'லிப்ட்' வசதியும் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
இதன்மூலம் இனி பாதசாரிகள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையத்தை எந்தவித சிரமமின்றியும், விரைவாகவும் சென்றடையலாம். எல்லாவற்றையும் விட இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர இருக்கிறது. இதனால் பாதசாரிகள் இளைப்பாரிக்கொண்டே இந்த பாலத்தில் பயணிக்கலாம்.
வழிமேல் விழிவைத்து...
மேட்லி சுரங்கப்பாதையின் கீழே இருந்து இந்த பாலத்தை பார்த்தாலே ஏதோ ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதிக்குள் முழுமையடைந்து, அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட இருக்கிறது.
பொதுவாக பண்டிகை காலங்களில் தியாகராயநகர் பகுதியை சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் திக்குமுக்காடி போகும். ஆனால் இந்த பாலம் நடைமுறைக்கு வந்தால் கூட்ட நெரிசல் வெகுவாக குறையும். தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் மாணவ-மாணவிகள், தொழிலாளிகள் சிரமம் தீரும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே சென்றடையலாம்.
இப்படி எல்லாவகையிலும் சிரமத்தை தீர்த்து மகிழ்ச்சியும், பரவசமும் தரக்கூடிய இந்த ஆகாய நடை மேம்பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்று பொதுமக்கள் வழிமேல் விழிவைத்து ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள்.
மும்பை போன்று மாறும் சென்னை
மும்பை போன்ற பெருநகரங்களில் கூட்ட நெரிசல் மிக்க முக்கிய சாலைகளை ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆகாய நடை மேம்பாலங்களை எங்கு பார்த்தாலும், அதன் மறு பகுதி ரெயில் நிலையம் தான் என எளிதில் யூகித்து விடலாம். அந்தவகையில் இதுபோன்ற முயற்சி சென்னையிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது நல்ல திட்டம் என்றும், முக்கிய ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலங்கள் பல இடங்களில் கட்டப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.