கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மேம்பாட்டு பயிற்சி
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி இன்று முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை வேளாண் அறிவியல் நிலையம் கோவிலாங்குளம் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள்
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், கல்வி தகுதி குறைந்தபட்சம் 5-ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களாகவும், கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் ஆர்வம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியானது வேளாண் அபிவிருத்தி நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.
வாய்ப்பு
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், மேலாண்மை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
விவசாயத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோர்களாக மாறிட இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.