கார் மோதி பெண்கள் உள்பட 6 பேர் காயம்
நடுவீரப்பட்டு அருகே கார் மோதி பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.;
நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு அருகே உள்ள வானமாதேவி குழந்தைகுப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 39). இவர், தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் நடுவீரப்பட்டு-சத்திரம் சாலையில் நரியங்குப்பத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார், திடீரென தறிகெட்டு ஓடி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் மற்றும் ஆனந்தகுமாரின் கார் மீது மோதியது. இதில் ஆனந்தகுமார், கிருஷ்ணவேணி, மோட்டார் சைக்கிளில் சென்ற பத்திரக்கோட்டையை சேர்ந்த ரஞ்சித் (27), சாலையில் நடந்து சென்ற செல்வி (55), லீலாவதி (45), விபத்தை ஏற்படுத்திய காரில் சென்ற பத்திரக்கோட்டையை சேர்ந்த லிங்கேஷ் (16) ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.