செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

Update: 2023-06-17 16:24 GMT


குற்றவழக்கில் கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீ்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதவி நீக்கம்

கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசின் பரிந்துரை கடிதத்தை திருப்பி அனுப்பியதற்கு சிவசேனா கட்சி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

அரசு ஊழியர் ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர் பணியை தொடர முடியும் என சட்டம் உள்ளது. அதுபோல் செந்தில் பாலாஜி, சட்டப்படி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து தமிழக சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்குவதை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.

கண்டிக்கத்தக்கது

மக்கள் நலனுக்காக ஒதுக்கும் திட்டங்களில் ஊழல் செய்யும் அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் பார்க்கும் நேரத்தில், அரசு மதுபான கடைகளில் வெளிப்படையாகவே பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு நபரை முதல்-அமைச்சர் காப்பாற்ற நினைப்பது வெட்கக்கேடானது.

மக்கள் பிரதிநிதிகள் ஊழல் செய்து கைது செய்யப்பட்டால் அவர்களாகவே தங்கள் பதவியில் இருந்து ஒதுங்கிக்கொள்வது தான் நாகரீகமான செயல். எனவே கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை தொடர்வது கண்டிக்கத்தக்கது. அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்