சிவகாசி கடம்பன்குளம்-புதுகண்மாய் நீர்வழிப்பாதை சரி செய்யப்படுமா?
சிவகாசி அருகே உள்ள கடம்பன்குளம்-புதுகண்மாய் இடையே உள்ள நீர் வழிப்பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பள்ளப்பட்டி பஞ்சாயத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள கடம்பன்குளம்-புதுகண்மாய் இடையே உள்ள நீர் வழிப்பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பள்ளப்பட்டி பஞ்சாயத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பன்குளம் கண்மாய்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயையொட்டி நேருகாலனி, விவேகானந்தர்காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகியவை உள்ளது. இந்த பகுதியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கடம்பன்குளம் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தது. அதே நேரத்தில் கடம்பன்குளம் கண்மாயில் இருந்து புதுகண்மாயிக்கு செல்லும் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் சூழ்ந்தது
இந்தநிலையில் கடம்பன்குளம் கண்மாய் நிரம்பி வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள நேரு காலனி, விவேகானந்தர்காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகிய பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தலைவர் உசிலை செல்வம், துணைத் தலைவர் ராஜபாண்டியன், செயலர் லட்சுமணபெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் கூறியதாவது, இது குறித்து யூனியன் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர். மழை நின்றவுடன் கண்மாய் கரையை உயர்த்தும் பணி தொடங்கப்படும். தற்போது பெய்து வரும் மழையால் நேருகாலனி உள்ளிட்ட 3 காலனி மக்களுக்கு இனி பாதிப்பு இருக்காது. தண்ணீர் வெளியேறியவுடன் 3 காலனி பகுதியிலும் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வார்டு உறுப்பினர் லோகேஸ்வரி கூறியதாவது, கடம்பன்குளம் கண்மாய் நிரம்பி ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று பிரச்சினை வருகிறது. இனிவரும் காலத்தில் இது போன்ற பிரச்சினை வராமல் இருக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.