சிவகங்கை
சிவகங்கை நகர சபை கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகர சபை ஆணையாளர் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வைத்தார். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழியை தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து நகர சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். அதற்கு நகர்மன்ற தலைவர் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்த கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முடிவில் நகர சபை துணை தலைவர் கார் கண்ணன் நன்றி கூறினார்.