மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடம் தேர்வு

ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடம் தேர்வு செய்யும் பணியினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-03-26 19:09 GMT

ராஜபாளையம்.

ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடம் தேர்வு செய்யும் பணியினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மாம்பழம் பதப்படுத்துதல்

ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் மாம்பழ கூழ் பதப்படுத்துதல் மற்றும் தென்னை விவசாயிகளின் நலன் கருதி சிட்கோ மூலம் மாம்பழம் பதப்படுத்துதல் தொழில்பேட்டை மற்றும் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை தங்கப்பாண்டியன் எம். எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அயன் கொல்லங்கொண்டான் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மாம்பழ கூழ் பதப்படுத்துதல் தொழில்பேட்டை வேண்டும். இதற்கு தனியார் நில உரிமையாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களும் இடம் தருவதாக உறுதி அளித்தனர். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் மாம்பழ கூழ் பதப்படுத்துதல் தொழிற்பேட்டை மற்றும் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூமி பூஜை

அதேபோல மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி திருவள்ளூர் நகரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கான பணிகளுக்கு பூமி பூஜை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், இந்தியாவிலேயே அதிக அளவில் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக தமிழக அரசு தான் நிதி ஒதுக்கி வருகிறது.

மேலும் எனது நிதியிலிருந்து ராஜபாளையம் தொகுதியிலுள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர் நகரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் நகரிலுள்ள சேத்தூர் சேவக பாண்டியன் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்