அரசு பள்ளியில் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஏரல் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தி, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ் நிலையம் அருகில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், மாணவிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த 2 ஆண்டுகளாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை, ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் ஏரலில் இருந்து மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுத்தொண்டநல்லூருக்கு சென்று படித்து வருகின்றனர். ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அங்கு சேதமடைந்த மற்ற கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான கட்டிடத்தில் கழிவறையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதனைக் கண்டித்து மாணவிகள், பெற்றோர்கள் நேற்று மாலையில் சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலை அம்மன் பள்ளிக்கூட வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா, தலைமை ஆசிரியர் விஜிலா மேரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கூட கழிவறையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தண்ணீர் வசதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.