பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகிரி:
சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான கோம்பை ஆற்றில் சிவகிரி பகுதி மக்களுக்காக குடிநீர்கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சிவகிரி பகுதியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியின் அருகாமையில் உள்ள சின்ன ஆவுடைப்பேரி கண்மாயில் தொடர்ந்து டிராக்டர் மூலம் மண் அள்ளுவதால் குடிதண்ணீர் கிணற்றின் அருகாமையில் நீரோட்டம் குறைந்தது. எனவே சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் மண் அள்ளுவதை தடை செய்ய வலியுறுத்தி 18-வது வார்டு கவுன்சிலரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் 8-வது வார்டு கவுன்சிலர் அருணாசலம் முன்னிலையில் மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், சிவகிரி கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சிவகிரி நகரச் செயலாளர் பால்சாமி, ஆகியோர் கலந்துகொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சிவகிரி பேரூராட்சி செயலாளர் வெங்கடகோபு, தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.