சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற தம்பியை மீட்டு தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் சகோதரி மனு
சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற தம்பியை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சகோதரி மனு கொடுத்தார்.
சேலம்,
சகோதரி மனு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ெபாதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்றது. தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் நேற்று தனது உறவினர் லட்சுமி என்பவருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.
பின்னர் இதுகுறித்து பழனியம்மாள் கூறும் போது, எனது தம்பி பழனிவேல் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு கூலி வேலைக்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் 2 ஆண்டுகள் எங்களுடன் போனில் தொடர்பில் இருந்தார். அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்த நபரிடம் விசாரித்த போது சரியான பதில் தெரிவிக்கவில்லை. எனவே தமிழக அரசின் மூலம் எனது தம்பியை கண்டுபிடித்து மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தர்ணாவிற்கு முயற்சி
ஓமலூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது 3 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்துக்கு முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில் வெங்கடாசலத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெங்கடாசலம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் மனு கொடுத்தார்.