கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையின் உருவம்

Update: 2023-06-14 16:54 GMT


காங்கயம் அருகே ஊதியூர் மலையடிவார பகுதியில் உலா வரும் சிறுத்தையின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஊதியூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை வைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள், கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் சிறுத்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

கால்தடங்கள் ஆய்வு

ஆனால் சிறுத்தை கடந்த 3 மாதங்களாக கூண்டுகளில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இதனிடையே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் அதிலும் சிறுத்தையின் உருவம் பதிவாகவில்லை.

சிறுத்தையின் உருவம் பதிவானது

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளதால் ஊதியூர் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விரைவில் சிறுத்தையை பிடித்து பொதுமக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்