இரும்புசங்கிலியில் கட்டி வைத்திருந்த நாயை தூக்கி சென்ற சிறுத்தை

ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது.

Update: 2023-07-10 16:51 GMT

சிறுத்தை நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இருந்து வருகிறது.

ஆட்டுக்குட்டிகள் மாயம்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தங்களது தோட்டத்தில்கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது. அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அதன் உரிமையாளர் வெளியே ஓடி வருவதை பார்த்த சிறுத்தை தப்பி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது.

நாயை தூக்கி சென்றது

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊதியூர் காசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள குப்புதுரை என்பவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சிறுத்தை தூக்கி சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அலேக்காக தூக்கி சென்றது.

பின்னர் காலை ஆட்டுப்பட்டியை பார்க்க சென்ற விவசாயி அங்கு கட்டப்பட்டிருந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சங்கிலிகள் சேதமடைந்தது மற்றும் சிறுத்தையின் கால்தடங்கள் இருந்ததை வைத்து சிறுத்தை நாயை தூக்கி சென்றது உறுதி செய்தனர். ஊதியூரில் சிறுத்தை இரும்பு சங்கிலியை அறுத்து நாயை தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை ஏன் பிடிபடவில்லை?

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

ஊதியூர் மலைப்பகுதி மிகவும் வளம்மிக்கது. மேலும் மலையை சுற்றிலும் அதிக பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்பு காட்டில் மான்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகிறது. அதுமட்டுமல்ல மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி அமைத்து ஆடு, மாடுகளை தோட்டத்து உரிமையாளர்கள் வளர்த்து வருகிறார்கள்.

இந்த மலையில் பதுங்கி உள்ள சிறுத்தை அவ்வப்போது அடிவார பகுதிக்கு வந்து நாய், மாடு மற்றும் ஆடுகளை தூக்கி சென்று விடுகிறது. அதுவும் மலையில் ஆங்காங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. இரைைய தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது. பின்னர் பசிக்கும்போது கீழே வந்து வேட்டையாடுகிறது. அதனால்தான் அதை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் விரைவில் சிறுத்தையை பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்