சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-05-06 18:30 GMT

செல்லியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனைதொடர்ந்து கடந்த 28-ந் தேதி படைத்தேர் திருவிழா கொட்டும் மழையிலும், 30-ந் தேதி மாதிரி தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக தேரோடும் வீதிகள் சேறும், சகதியுமாக மாறியது. இதன்காரணமாக தேரோட்டம் 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் சேறும், சகதியுமாக இருந்த இடங்களில் கருங்கல், ஜல்லிக்கற்களை கொட்டி பொதுமக்கள் சமன் செய்தனர்.

தேரோட்டம்

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மனும், மாரியம்மனும் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோடும் வீதிகள் வழியாக சென்ற அம்மன்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலையில் தொடங்கிய தேரோட்டம் மாலையில் சன்னதியை அடைந்தது. அதன் பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தனர். பெண்கள் நடை கும்பிடு போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்