சீர்காழி உதவி கலெக்டர் ஆய்வு

நெய்தவாசலில் மண் குவாரியை மூட கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-03-12 18:45 GMT

திருவெண்காடு:

நெய்தவாசலில் மண் குவாரியை மூட கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா ஆய்வு மேற்கொண்டார்.

மண் குவாரி

மயிலாடுதுறை மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரிபூம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்த வாசல் கிராமத்தில் தனியார் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது.

இதனால் நெய்த வாசல், புதுக்குப்பம், தென்பாதி, வடபாதி, குந்திரிமேடு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 1000 குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மேற்கண்ட பகுதிகள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் குடிநீர் வெளியிடங்களில் இருந்து பைப் லைன் மூலம் கொண்டு வரப்படுகிறது.

நிலத்தடி நீர்

ஒரு சில இடங்களில் நல்ல நீர் கிடைக்கிறது. ஆனால் தற்போது தனியார் மண் குவாரியில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மண்குவாரியில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என கூறி இருந்தார்.

உதவி கலெக்டர் ஆய்வு

அந்த மனுவுடன், மண் குவாரியை மூடக்கோரி நிறைவேற்றப்பட்ட ஊராட்சி மன்றத்தின் தீர்மான நகலையும் வழங்கி உள்ளார். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மண் குவாரியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ராஜாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்