சிங்கோனா டேன்டீ ஆஸ்பத்திரி விரைவில் தரம் உயர்த்தப்படுகிறது
வால்பாறை அருகே சிங்கோனா டேன்டீ ஆஸ்பத்திரி விரைவில் தரம் உயர்த்தப்படுகிறது. அங்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
வால்பாறை
வால்பாறை அருகே சிங்கோனா டேன்டீ ஆஸ்பத்திரி விரைவில் தரம் உயர்த்தப்படுகிறது. அங்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
டேன்டீ ஆஸ்பத்திரி
வால்பாறை அருகே சிங்கோனாவில் அரசு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) செயல்பட்டு வருகிறது. இங்கு டேன்டீ நிர்வாகம் சார்பில் கடந்த 1951-ம் ஆண்டு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல நிலையில் இயங்கி வந்த ஆஸ்பத்திரி நாளடைவில் முறையாக பராமரிக்காமல் விடப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு பிரிவு கட்டிடங்கள் பயன்படாமல் கிடந்தது.
இதற்கிடையில் வால்பாறையில் 2006-ம் ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடங்கள் கட்டப்படாத நிலையில், டேன்டீ ஆஸ்பத்திரி கட்டிடங்கள் கல்லூரிக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கு கல்லூரி செயல்பட்டு வருவதால், டேன்டீ ஆஸ்பத்திரியின் அந்த கட்டிடங்கள் மீண்டும் பயனின்றி கிடக்கின்றன.
இணை இயக்குனர் ஆய்வு
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் டேன்டீ ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி பல்வேறு புதிய சிகிச்சை பிரிவுகளுடன் அரசு ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டேன்டீ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ பணியாளர்களாக மாற்றப்பட உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக டேன்டீ ஆஸ்பத்திரியை நேற்று கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளதால் அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தினால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள், தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி மையமாக கூட இந்த ஆஸ்பத்திரியை பயன்படுத்தலாம், இதை குறிப்பிட்டு சுகாதாரத்துறைக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வால்பாறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஷ் ஆனந்தி மற்றும் டேன்டீ ஆஸ்பத்திரி மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.