ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனா.
சென்னை,
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். ஒற்றை தலைமை கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
இதற்கிடையில் ஒற்றை தலைமை கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், அது கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போட்டி கோஷம் எழுப்பினர். இதனால் கட்சியில் மீண்டும் பூகம்பம் வெடித்தது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் 2-வது நாளான நேற்றும் தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அந்தவகையில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தர்மர் எம்.பி., பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அசோக் உள்பட பலர் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில்...
அதேவேளையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, சத்யா, ராஜேஷ் உள்பட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் திண்டுக்கல் சீனிவாசனும், ஆர்.பி.உதயகுமாரும் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
'கூட்டத்தில் நடந்ததே வேறு'
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் உள்ளார். தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசும்போது கூட, கோபத்துடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
''கட்சி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க முடியாத நிலையில், அவர்களை சமாதானப்படுத்துவது எப்படி? மாவட்ட செயலாளர்கள் எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும்? போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காகவே நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. இதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். ஆனால் நடந்தது வேறு. என்னவென்று சொல்வது?" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதே வேளையில் ஒற்றை தலைமை கூடாது, இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்
இதற்கிடையே சென்னை மாநகரின் பல இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், 'ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமையேற்க வேண்டும்' என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டதாகவும் கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட தேனியில் அல்லிநகரம், பெரியகுளம், சின்னமனூர், போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறியதாவது:-
விட்டுக்கொடுக்கதயாராக இல்லை
ஏற்கனவே முதல்-அமைச்சர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி என 2 முறை கட்சி நலனுக்காக ஓ.பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்துள்ளார். இந்த தடவை எதையுமே விட்டுக்கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் தயாராக இல்லை. அ.தி.மு.க. பிரிந்து கிடந்த சமயத்தில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.
அப்போது இருந்து இரட்டை தலைமையில்தான் கட்சி செயல்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த பிரச்சினை எழவில்லை. இப்போது திடீரென ஒற்றை தலைமை எனும் விவகாரத்தை கையில் எடுக்க காரணம் என்ன?. இது தவறான போக்கு. இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் எதற்காகவும், எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்
இதற்கிடையே நேற்று மாலையும் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் ஒலித்து வருவதும், ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதும் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்து என்ன ஆகுமோ? என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக நிலவுவதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.