"ஒற்றை தலைமை விவகாரம்: போஸ்டர் ஒட்ட வேண்டாம்" - கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2022-06-16 09:44 GMT

சென்னை,

அ.தி.மு.க. வில் ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு குழுவை கலைத்துவிட்டு 20 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.முக.வில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்னை, தேனி உள்பட பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது அ.தி.மு.க.வில் சர்ச்சையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து சேலம் வருகை தந்தார். அவருக்கு வரவேற்பளித்த ஆதரவாளர்கள் பல்வேறு அரசியல் முழக்கங்களை எழுப்பினர்.

ஏற்கெனவே ஒற்றை தலைமை குறித்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் கட்சிக் கூட்டங்களில் சலசலப்பும் ஏற்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களுக்கு ஒற்றை தலைமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என்றும் பொதுச் செயலாளர் என முழக்கம் எழுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்