அ.தி.மு.க.வில் வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை..! யார் அந்த ஒற்றை தலைமை ...! தனித்தனியே ஆலோசனை

Update: 2022-06-15 07:34 GMT

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள். அது மட்டு மல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையி டப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்க படக்கூடும் என தெரிகிறது.

சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கோஷம் எழுப்பினர்.இதையடுத்து, அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்த நிர்வாகிகள், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் வாக்கெடுப்பு மூலமாக தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதையும் ஏற்க தயார் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் ஒற்றை தலைமை முடிவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது

வருகின்ற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என்று இறுதி செய்ய வேண்டும் கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்,

சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த கோஷம் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.வு.க்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்டோர் வருகை தந்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி,தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினர்

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்