அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம்;த.மா.கா. நிலைப்பாடு என்ன?--மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி

அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக த.மா.கா. நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2022-06-29 20:16 GMT

அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக த.மா.கா. நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

உள்கட்சி விவகாரம்

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. கூட்டணியில் இருப்பதால், உள்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து தெரிவிப்பது முறையல்ல, சரியல்ல. நாங்கள் மரியாதைக்குரிய கூட்டணி கட்சி. அ.தி.மு.க. குறித்து நான் பேசுவது சரியானது அல்ல. அ.தி.மு.க. தமிழகத்தின் மிக பலமான கட்சி. அந்த கட்சி மேலும் சிறக்க வேண்டும், வளர வேண்டும், உயர வேண்டும் என்பது தான் எங்களது எண்ணமாக இருக்க முடியும். அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அந்த சமயத்தில் கூட்டணியின் வெற்றியை பாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழக ஆளும் கட்சி, அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தை பெரிதாக்க நினைக்கிறது.

போட்டி கிடையாது

தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அ.தி.மு.க. தான் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும். மக்கள் பிரச்சினையில் பா.ஜ.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது. எங்களுக்குள் கோபம், தாபம், போட்டி கிடையாது. இப்படி இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியை பலப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது.

தி.மு.க.வின் ஆட்சி

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் தமிழக மக்கள் ஏமாந்த நிலையில் தான் இருக்கிறார்கள். தேர்தலின் போது தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். ஆனால், அதில் எந்த வாக்குறுதிகளையும் மக்களுக்கு கொடுக்கமுடியவில்லை. அதன் காரணமாக எதிர்கட்சிகளை குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோல், அகில இந்திய பிரச்சினைகளை காரணம் காட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது. தி.மு.க.வை மக்கள் நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

மதுரையில் பொதுக்கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. வருகிற 15-ந்தேதி மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. அதனை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை பைபாஸ் சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தை ஜி.கே. வாசன் திறந்து வைத்தார். இதில், முன்னாள் எம்.பி. சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாவட்ட நிர்வாகிகள் பைரவமூர்த்தி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்