கிரைண்டர் தயாரிக்கும் கோவை தொழில் அதிபர் பலி

Update: 2022-12-26 16:29 GMT


அவினாசி அருகே சாலையோர கம்பத்தில் கார் மோதிய கோர விபத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த கிரைண்டர் தயாரிக்கும் கோவை தொழில் அதிபர் பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜையில் கலந்து கொண்டு விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இந்த விபத்து குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோர விபத்து

கோவை பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மோகன் (வயது 38). தொழில் அதிபரான இவர், கோவை ஆவாரம்பாளையத்தில் கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் சபரிமலை செல்ல மாலை அணிந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் பவானியில் அய்யப்பசாமிக்கு மண்டல பூஜை நடந்தது. அதில் கலந்து கொள்ள மாலை அணிந்த நண்பர் ஒருவர் மோகனை அழைத்து இருந்தார். அதன்படி மோகன் மற்றும் கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ரோசன் மகன் சுசில் (22), கோவையை சேர்ந்த நிர்மல் மகன் மிதுன் (16) ஆகியோர் பவானி சென்றனர். இவர்களும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர்.

பின்னர் அங்கு பூஜை முடிந்ததும் மீண்டும் காரில் கோவைக்கு புறப்பட்டனர். அப்போது பூஜையில் கலந்து கொண்ட சேலம் குறிஞ்சி நகரை சேர்ந்த ஜெயசூர்யா (28) என்பவரும் கோவை வருவதாக மோகனிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜெயசூர்யாவையும் அந்தகாரில் ஏற்றிக்கொண்டார்.

அதன்படி பவானியில் இருந்து கார் கோவை நோக்கி புறப்பட்டது. காரை சுசில் ஓட்டினார். முன் இருக்கையில் மோகன் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் ஜெயசூர்யா மற்றும் மிதுன் ஆகியோர் இருந்தனர்.

இவர்களுடைய கார் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பெயர்ப்பலகை கம்பத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

தொழில் அதிபர் பலி

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிவந்த சுசில், தொழில் அதிபர் ேமாகன், ஜெயசூர்யா மற்றும் மிதுன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார் விபத்தில் கிரைண்டர் தயாரிக்கும் தொழில் அதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்