ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ரூ.15 லட்சத்தில் வெள்ளி வாகனங்கள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் ரூ.15 லட்சத்தில் வெள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டது.;
திருவட்டார்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் ரூ.15 லட்சத்தில் வெள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டது.
கோவில் கும்பாபிஷேகம்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்கள் திரட்டிய நிதியில் ரூ.15 லட்சம் செலவில் வெள்ளி கமலவாகனம் மற்றும் அனந்த வாகனம் செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் முழுவதும் நேற்று முடிவடைந்தது.
இதையடுத்து நேற்று காலையில் இந்த வாகனங்கள் சிற்பி செல்வராஜா தலைமையில் சிறப்பு பூஜைக்கு பின்னர் மினி லாரியில் ஏற்றப்பட்டு திருவட்டார் தளியல் கருடாள்வார் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.
ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது
அங்கு மாலையில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு மேள தாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கோவிலை வலம் வந்த பின்னர் உதமார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் 2 வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடந்து வரும் நிலையில் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.