பி.ஏ.பி. வாய்க்காலை தூர்வாரிய பகிர்மான குழு

பி.ஏ.பி வாய்க்காலை தூர்வாரிய பகிர்மான குழு தூர்வாரியது.

Update: 2023-09-12 10:22 GMT

பொங்கலூர்,

பல ஆண்டுகளாக தூர் வாராமல் கிடந்த பி.ஏ.பி வாய்க்காலை தூர்வாரிய பகிர்மான குழு தூர்வாரியது. இதனால் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி செல்லும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

பி.ஏ.பி. வாய்க்கால்

திருப்பூர் மாவட்டத்தின் உயிர்நாடி பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டம். இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த திட்டம் மட்டும் இங்கு செயல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களை போல வறட்சியை பாதித்த பகுதியாகவே காணப்பட்டிருக்கும். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை இன்றும் பலரும் நன்றியோடு பாராட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பாசனம் பெரும் பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் பெற்று வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருப்பூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான குருக்கத்தி வரை செல்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் 90 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாசன வசதி பெற்று வருகிறது.

பிரதான கால்வாய் திருமூர்த்தி அணையில் இருந்து தொடங்கி காங்கயம் படியூர் வரை 125 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த பிரதான கால்வாயில் அவ்வப்போது மண்கள் சரிந்து விழுவதும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதாலும் கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபட்டு வருகிறது. இந்த பிரதான கால்வாய் தூர்வப்படாமல் இருப்பதாலேயே கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபடுவது என பல்வேறு பாசன சபை தலைவர்கள் பகிர்மான குழுவிடம் தெரிவித்தனர்.

தூர்வாரும் பணி

அதனைத் தொடர்ந்து பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள 13 பாசன சபைகளை ஒருங்கிணைத்து செயல்படும் பகிர்மான குழு தலைவர் கண்ணன் என்கிற தெய்வசிகாமணி தலைமையில் பிரதான கால்வாயில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது. இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தூர்வாரிய மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் துணிகள் உட்பட பல்வேறு இதர பொருட்கள் மலை போல் குவிக்கப்பட்டு உள்ளது. தற்போது தூர்வாரப்பட்டுள்ள பணியால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தங்கு தடையின்றி கடைமடை வரை சென்று சேர்வதற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

குறிப்பாக இந்த பணி திருமூர்த்தி அணையில் இருந்து 88-வது கிலோமீட்டரில் தொடங்கி 113- வது கிலோமீட்டர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இந்த பகிர்மான குழுவிற்கு உட்பட்ட பகுதியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 18-ந் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெரும் என பகிர்மான குழு தலைவர் தெரிவித்தார். இந்த பணிகளை செய்ய 4 பொக்லைன் எந்திரங்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை முழுமையாக பகிர்மான குழுவை செய்வதால் அவர்கள் இதற்கான செலவாக சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தனர். பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த பி.ஏ.பி பிரதான கால்வாயில் தற்போது தூர்வாரப்பட்டு இருப்பதை பார்த்து விவசாயிகள் பகிர்மான குழுவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்