தாலுகா அலுவலகம் முற்றுகை
தனியார் மதுபான கூடத்தை மூடக்கோரி திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.;
திருப்புவனம்,
மடப்புரம் விலக்கு அருகே செயல்படும் தனியார் மதுபான கூடத்தை மூடக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமையில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். பின்பு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சிவகங்கை கோட்ட ஆய அலுவலர் கண்ணன், தாசில்தார் ரத்னவேல்பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் மடப்புரம் விலக்கு அருகே செயல்படும் தனியார் மதுபான கூடத்தால் அதை சுற்றியுள்ள பள்ளிகளின் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தனியார் மதுபான கூடத்தை 30 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்பின்னர் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.