சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை மாதவரம் பால்பண்ணையில் 25 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-18 09:47 GMT

சென்னை,

அரசு சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் மூன்று மருத்துவப் புத்தகங்களை எழுதியுள்ளார். 'சுகம் தரும் சித்த மருத்துவம், நோய் நாடி சித்த மருத்துவம் நாடி, வேர் பாரு தழை பாரு' என்ற அந்த புத்தங்கங்களின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலக அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நூல்களை வெளியிட்டார். முதல் பிரதிகளை வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழக அரசு நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல்லில் 200 ஏக்கரில் அரசு மூலிகைச் செடிகளை பயிரிடுகிறது. மூலிகைச் செடிகளைப் பியிரிடும் முறைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கான அலுவல்ரீதியான பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.2கோடியில் அதற்கான அலுவலகம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்ததும் சென்னை மாதவரம் பால்பண்ணையில் 25ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்