கோவையில் கடையடைப்பு போராட்டம்: பாஜகவின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி - கே.எஸ்.அழகிரி
கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் நிலையம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. அதில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழகக் காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். தமிழக அரசும் தேசிய புலனாய்வு முகமையிடம் இந்தவழக்கை ஒப்படைத்து இருக்கிறது.
அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31-ந் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.