காட்சிப்பொருளான ஆங்கிலேயர் கால மணிக்கூண்டுகள்

கடலூரில் காட்சிப்பொருளான ஆங்கிலேயர் கால மணிக்கூண்டுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2023-05-03 19:45 GMT

கடலூர்:

பண்டைய காலங்களில் மக்கள் சூரிய ஒளியை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் கால நேரங்களை அறிந்து கொள்ள வசதியாக நகரின் முக்கிய பகுதிகளில் மணிக்கூண்டுகள் அமைத்தனர். இந்த மணிக்கூண்டுகள் அனைத்தும் கோபுர வடிவத்தில் நகரில் நீண்ட தூரத்தில் இருந்தும் பார்க்கும் வகையில் மிக உயரமாக அமைக்கப்பட்டது. மேலும் நான்கு திசைகளில் இருந்தும் பொதுமக்கள் நேரத்தை பார்க்கும் வகையில், நான்கு பக்கங்களிலும் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மணி அடித்தும் நேரத்தை தெரிவித்தன.

அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், கடலூர் பஸ் நிலையம், மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்கா ஆகிய 5 இடங்களில் மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. இந்த மணிக்கூண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் நினைவு சின்னமாக இருப்பதுடன், பழங்கால கட்டிட வடிவமைப்பிற்கு வரலாற்று சான்றாகவும் உள்ளது.

பராமரிக்க வேண்டும்

ஆனால் இந்த மணிக்கூண்டுகள் அனைத்தும் காலப்போக்கில் பராமரிக்கப்படாமல், வெறும் காட்சிப் பொருளாகவே மாறியது. மேலும் மணிக்கூண்டுகளில் அமைக்கப்பட்ட பழங்கால வடிவமைப்பில் உள்ள கடிகாரங்களை சரி செய்யக்கூடிய மெக்கானிக்குகளும் தற்போது இல்லை. இதனால் மணிக்கூண்டுகளில் இருந்து பழங்கால கடிகாரங்கள் அகற்றப்பட்டு, எலக்ட்ரானிக் கடிகாரங்கள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் கடிகாரங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கடிகாரங்களையும் முறையாக பராமரிக்காததால், கடலூரில் உள்ள அனைத்து மணிக்கூண்டுகளும் செயலிழந்து காட்சிப் பொருளாக மாறிவிட்டது.

மேலும் தற்போது மணிக்கூண்டு கட்டிடங்களும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதிலும் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்காவில் உள்ள மணிக்கூண்டு கட்டிடத்தில் மரங்களே வளர தொடங்கி விட்டது. எனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் அடையாளமாக காணப்படும் மணிக்கூண்டுகளை பழமை மாறாமல் புதுப்பித்து, பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்