கிருஷ்ணகிரியில்ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சிஅமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

Update: 2023-08-13 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில், மாவட்ட பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கம் நடத்திய ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ., சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். அதே போல் சுகாதாரத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளி கல்வித்துறையும், சுகாதார துறையும் இரண்டு கண்களாக காத்து வருகிறார். அதன் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மனசு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார்.

ஒத்துழைப்பு

அதே போல் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டியாகவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் என 13 லட்சம் மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டில் பயனடைந்துள்ளனர். வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வர ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வருதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், ஒரு லட்சம் மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக பயன்பெறும் வகையில் ரூ.12 லட்சம் வழங்கிய ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ்க்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர்கள் சான்றுகளை வழங்கினார்.

தொடர்ந்து நிமிர்ந்து நில் கையேட்டை வெளியிட்டு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தொடக்கக்கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முனிராஜ், நரசிம்மன், ஆனந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேஷ், வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்