'வளரும் தமிழகம்' கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டிக்கொலை

திருவாரூர் அருகே ‘வளரும் தமிழகம்’ கட்சி பிரமுகர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-03-10 22:10 GMT

திருவரூர்,

'வளரும் தமிழகம்' கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வகித்து வந்தவர், ராஜ்குமார் (வயது 34). திருவாரூர் மாவட்டம், பூவனூர் பகுதியை சேர்ந்த இவர் மீது கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் திருவாரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேற்று காலையில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவர், வீட்டுக்கு செல்லும் வழியில் வக்கீலை கொரடாச்சேரி அருகில் உள்ள கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் கமலாபுரம் சென்றார். அங்கு கடைவீதி அருகே சென்றபோது, அவர் கார் மீது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ராஜ்குமார் காரின் பின்பக்க கதவு 'லாக்' ஆனது. இதனால் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை.

ஓட ஓட விரட்டிக்கொலை

இதற்கிடையே மோதிய சொகுசு காரில் இருந்து இறங்கிய மர்மக்கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜ்குமாரை நோக்கி வந்தது. அப்போதுதான் நடந்தது விபத்து அல்ல, கொலை முயற்சி என்பதை உணர்ந்த ராஜ்குமார் சுதாரித்துக்கொண்டு, காரில் இருந்து இறங்கி, பதற்றத்துடன் ஓட்டம் பிடித்தார். ஆனால் மர்மக்கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச்சென்று, சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையாளிகள் மின்னல் வேகத்தில் காரில் தப்பினர். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், சினிமா காட்சி போல நடந்த இந்த படுகொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 தனிப்படைகள் அமைப்பு

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ராஜ்குமாரின் உடலை திருவாரூர் மேற்கு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்விரோதத்தில் கொலையா?

ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார். எனவே முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்