செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டுமா? முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-09-06 00:14 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் தற்போது கோர்ட்டு காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவரது கைதை தொடர்ந்து, செந்தில்பாலாஜியை துறை இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து எந்த சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவி வகிக்கிறார்? என்று கேள்வி கேட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக 'கோ-வாரண்டோ' வழக்குகளை தாக்கல் செய்தனர்.

நீக்க வேண்டும்

இதற்கிடையில் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி அவரை அமைச்சரவையில் இருந்து கவர்னர் நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், அந்த உத்தரவை கவர்னர் ஆன்.என்.ரவி திரும்ப பெற்றார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். அதில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, அந்த உத்தரவை திரும்ப பெற கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அதேபோல, குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சராக அறிவித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு

இந்த வழக்குகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று மாலையில் நீதிபதிகள் பிறப்பித்தனர்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

தகுதி இல்லை

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களின் தகுதி நீக்கம் பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், இந்திய அரசியல் சட்டத்திலும் கூறப்பட்டுள்ள போதும், அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல, நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளவரையோ, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலோ, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பதவி நீடிக்க தகுதியில்லை என்பது குறித்து எந்த சட்டப்பிரிவுகளையும் மனுதாரர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் திரும்ப பெற அதிகாரம் இல்லை என்று மனுதாரர் கூறுகிறார்.

பயன் இல்லை

இந்த விவகாரத்தில் கவர்னரின் அதிகாரம் என்பது விவாதத்துக்குரியது. அதற்காக கவர்னருக்கு இந்த ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடியாது. மேலும், ஒரு அமைச்சரை, அமைச்சரவையில் இருந்து நீக்க விரும்பினால், அதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுதான் செயல்படுத்த முடியுமே தவிர, தன்னிச்சையாக செயல்படுத்த கவர்னரால் முடியாது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. பெயரளவில்தான் அமைச்சராக உள்ளார். எந்த பணியும் செய்யாதவர் ஊதியம், படிகள் என்று பணப்பலன்களை பெற உரிமையில்லை. சம்பிரதாயத்துக்காக அமைச்சராக நீடிக்கும் அவரால் மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை.

உகந்தது அல்ல

தார்மீக அடிப்படையில், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கும், மாநில முதல்-அமைச்சருக்கும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருக்கிறது. மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சர், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பணிகளை கவனிக்க வேண்டும். எந்த பொறுப்பும் வழங்காமல், இலாகா இல்லாத அமைச்சராக, ஒருவரை நீடிக்க அனுமதிப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையிலும் தவறானது. இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது.

மக்களின் நம்பிக்கை களஞ்சியத்தை பெற்றவர் முதல்-அமைச்சர், அரசியல் சட்ட தார்மீகத்தை மீறி செயல்பட முடியாது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் எந்த பயனும் இல்லை. இது, அரசியல் சட்ட நெறிமுறைகள், நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்துக்கு உகந்ததும் அல்ல.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்