அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு - மக்கள் நீதி மய்யம்
அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளார்.;
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளூரிலேயே மருந்து கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும், நிதி நெருக்கடியால் போதிய மருந்து வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
அரசு டாக்டர்கள் சிலர், கடைகளில் மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிகளிடம் தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்குமாறு தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.