கல்லூரி மாணவர்களுக்கு குறும்பட போட்டி
தேனி மாவட்ட அளவில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களுக்கு குறும்பட போட்டி நடக்க இருப்பதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.;
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில், சமூக நலத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு சமமதிப்பை உருவாக்குதல், அவர்களுக்கு கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருங்கிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம் தொடர்பாக மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறும்படங்கள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் theni.nic.in என்ற இணையதளத்தில் தங்களது குறும்படத்தினை பதிவேற்றம் செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். குறும்படமானது மாணவ, மாணவிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதற்கான இணையதள முகவரியில் மாணவ, மாணவிகள் தங்களின் விவரங்களை பதிவு செய்து, குறும்படங்களை பதிவேற்றம் செய்யலாம். குறும்படங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தங்களது திறமைகளை வெளிப்படுத்த கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.