போதை பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
போதை பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறு குறு தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதாக கண்டறியப்பட்டால், அந்த கடைகள் நிரந்தரமாக மூடி உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டு போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.. மேலும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும். மேலும் உரிமையாளரின் உறவினர்கள் வங்கி கணக்குகளும் தேவை இருப்பின் அரசு விதித்துள்ள வழிமுறைகளின்படி வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.