வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-10-06 20:17 GMT

மணப்பாறை:

வாடகையை அதிகரிக்க எதிர்ப்பு

மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பல மடங்கு வாடகை அதிகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், முறையாக கடை வாடகை செலுத்தி வந்த நிலையில், திடீரென ஏற்கனவே செலுத்திய வாடகைக்கும் சேர்ந்து பல மடங்கு வாடகை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தினால் வாடகை செலுத்த தயாராக இருப்பதாக கடைக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

வாக்குவாதம்-மறியல்

ஆனால் முழுமையாக தொகையை செலுத்திட நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியதால், கடைக்காரர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தப்படாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

இதற்கு கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நகராட்சி பணியாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்புறப்படுத்திய போலீசார்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் சென்று உங்களின் கோரிக்கைக்கு தீர்வு கண்டு கொள்ளுங்கள் என்று கடைக்காரர்களிடம் போலீசார் கூறி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்