9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல்
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;
திருப்பூர்,
திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 62). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது கடைக்கு வந்த 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியிடம் நைசாக பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிவாவுக்கு இரண்டு பிரிவுகளில் தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்புக் கூறினார். கடுங்காவல் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.