மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம்

ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜக., இந்து அமைப்பு நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-20 18:45 GMT

மேட்டுப்பாளையம், 

ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து மேட்டுப்பாளையம், அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜக., இந்து அமைப்பு நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையடைப்பு போராட்டம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இந்தநிலையில் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று நீலகிரி தொகுதியில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட பல இடங்களில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன.ஊட்டியில் கமர்சியல் வீதி, மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், அங்குள்ள வணிக வளாகம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் கடைகள் திறந்து இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில், உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 50) என்பவர் பஸ் நிலையத்தில் கையில் கல்லை வைத்துக்கொண்டு, கடையை அடைக்கும்படி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் நந்தகிருஷ்ணன் (43) என்பவர் கடைகளை அடைக்கும்படி மிரட்டியதாக தெரிகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். சிறுமுகையில் சில்க் பஜார் உட்பட நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

25 பேர் கைது

இதேபோல் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள், வீதிகளில் கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சிறிய கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்து இருந்தது. அன்னூரில் 98 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளரும், அன்னூர் ஒன்றிய கவுன்சிலருமான ஜெயபால் உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை அறிந்த, இந்து அமைப்பு நிர்வாகிகள் மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூரில் இருந்து அன்னூருக்கு வந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் மண்டபத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். இதனால் அன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.

வணிகர்களுக்கு நன்றி

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஆ.ராசா பேசியதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. ஆ.ராசாவின் இந்து மத விரோத பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இந்து முன்னணி சார்பில் நடந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்த வணிகர் சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஒவ்வொரு கடையாக சென்று, கடைகளை திறக்கும் படி மிரட்டி உள்ளனர். அதற்கு போலீசாரும் துணை போய் உள்ளனர்.

கட்சியின் போக்கு பிடிக்காமல் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளதாக தெரிகிறது. இதேபோல் கட்சியை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், கோவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்