268 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Update: 2022-10-22 18:36 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 268 பட்டாசு கடை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்டு 272 விண்ணப்பங்கள், மாவட்ட வருவாய் அலுவலருக்கு உரிமையாளர்களால் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பங்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பரிசீலனை செய்தனர். பட்டாசு கடை அமைந்துள்ள இடம், கட்டிடத்தின் உறுதிதன்மை போன்றவற்றை தாசில்தார்கள், உதவி கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

மேலும் தீயணைப்புத்துறையினர் மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்டு பெறப்பட்டு உள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் நேரில் சென்று பட்டாசு கடை அமைவிடத்தை பார்வையிட்டனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் 268 பட்டாசு கடைகளுக்கு தற்காலிக அனுமதி கொடுக்க மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் பரிந்துரை செய்து உள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் 268 பட்டாசு கடைகளுக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விபத்தில்லா தீபாவளி

அனுமதி பெற்ற பட்டாசு கடை உரிமையாளர்கள் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 268 தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பட்டாசுகளை மொத்தமாக பாக்கெட்டில் அடைத்து தான் விற்பனை செய்ய வேண்டும். பிரித்து போட்டு விற்பனை செய்ய கூடாது என விற்பனையாளர்களை அறிவுறுத்தி உள்ளோம். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பட்டாசு கடைகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடவேண்டும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

மேலும் செய்திகள்