குரு நானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சி மையம் - அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்..!

கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-12-20 15:36 GMT

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரு நானக் கல்லூரி வளாகத்தில் ஷாஹித் பகத் சிங் விளையாட்டு வளாகம் மற்றும் சர்கஹி துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சி மையத்தை இன்று (20.12.2023) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதிக அளவிலான மழை பெய்து இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளதால், நான் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று வந்துள்ளேன். அதற்கு முக்கியமான காரணம் நான் படித்தது லயோலா கல்லூரி என்றாலும் அதிகப்படியான எனது நேரத்தை இந்த கல்லூரியில் தான் செலவழித்து உள்ளேன்.

இந்த கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானம், ஷெட்டில் காக் மைதானத்தில் தான் அதிகப்படியான நேரத்தை செலவழித்து உள்ளேன். அதனால் இந்த நிகழ்வுக்கு கேட்டவுடன் ஒப்புக்கொண்டேன். இக்கல்லூரியின் நிகழ்ச்சிகளுக்கு கடந்த மூன்று தலைமுறையாக நாங்கள் வந்திருக்கிறோம். குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அதன் பிறகு எனது தந்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இருபது வருடங்களுக்கு முன்பு, இதே கல்லூரிக்கு நான் சிறப்பு விருந்தினராக அதுவும் அமைச்சராக வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இக்கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு அரசு கடந்த இரண்டரை வருடங்களில் விளையாட்டு துறைக்கு, குறிப்பாக நான் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வருடத்தில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் 4.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான பரிசுத்தொகை மட்டும் 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சைக்ளோத்தான் போன்ற போட்டிகளை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் வரும் ஜனவரி 19 முதல் நடைபெற உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்தக் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் கேலோ இந்தியா திறந்து வைக்கப்பட உள்ள பயிற்சி மையத்தில்தான் நடைபெற உள்ளது. இது போன்று கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்