கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிடி.ஜி.பி. தொடங்கி வைத்தார்
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தமிழக அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கி இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழக போலீஸ்துறை சார்பில் போலீஸ் மாவட்டங்கள் 11 சரகங்களாக பிரிக்கப்பட்டு சரகத்திற்கு 22 நபர்கள் வீதம் 242 போலீஸ் ஆளிநர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. முதல் நாளில் ரைபிள் பிரிவு போட்டி நடைபெற்றது. இன்று மற்ற போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
துப்பாக்கி சுடும் போட்டியில் தொடங்கி வைத்த பிறகு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. தற்போது மாநில அளவில் போலீசாருக்கு மற்றும் மற்ற அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியின் முக்கிய நோக்கம் இதில் வெற்றி பெறும் போலீசார், அதிகாரிகள் அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டு அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் தான் நடந்தது. அதில் மாநிலங்களுக்குள் இடையே நடந்த போட்டியில் தமிழ்நாடு தான் முதல் இடத்தை பிடித்தது. தமிழக போலீஸ்துறையில் பெண்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி பெண் போலீசார், அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போட்டியில் கலந்து கொண்ட போலீசார் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் வீரர்கள் வீராங்கனைகளிடம் இந்த போட்டியில் நல்ல ரேங்க் மதிப்பெண் எடுத்து வெற்றி அடைபவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு நாம் தொடர்ந்து முதலிடம் பெறுவது போல் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றார்.
அப்போது அவருடன் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.