என்னை கொலை பண்ணிருவாங்க...! வி.ஏ.ஓ கொலையில் அதிர்ச்சி திருப்பம்...! பதறவைக்கும் ஆடியோ

இவரை நேற்று 2 மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர்.

Update: 2023-04-26 11:50 GMT

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவரை நேற்று 2 மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்த் நிலையில் லூர்து பிரான்சிஸ் கொலைக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் அலட்சியமே காரணம் என்று சக பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.

லூர்துபிரான்சிஸ் ஆதிச்சநல்லூரில் வி.ஏ.ஓ வாக இருந்த போது அவரை வெட்டிக் கொல்ல முயற்சி நடந்ததாகவும், அப்போது தன்னை ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துக்குடி தாலுகாவிற்கு பணியிடமாற்றம் செய்யுமாறு கேட்ட லூர்துவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அதே தாலுகாவில் உள்ள முறப்பநாட்டிற்கு மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்ததாக பெண் கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக லூர்து பலமுறை கூறியும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் காலி இடம் இல்லை என்று அவரை முறப்ப நாட்டிலேயே பணி செய்ய நிர்பந்தித்தது யார் குற்றம்? என்று கேள்வி எழுப்பி உள்ள அந்த பெண் கிராம நிர்வாக அலுவலர், தற்போது அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரது உடலுக்கு முன்பு நின்று அழுது நாடகம் போடுகிறீர்கள் என்று கடுமையான வார்த்தைகளால் அதிகாரிகளையும், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினரையும் வறுத்தெடுத்துள்ளார்.

அதே நேரத்தில் தூத்துக்குடி வட்டத்தில் காலியான 3 இடங்களுக்கு, லூர்துவை தவிர்த்து, வேறு பெண் கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தது ஏன்? என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.

வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளின் பின்னணியில் சக்திவாய்ந்த பிரமுகர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த கொலையை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Full View


Tags:    

மேலும் செய்திகள்