சென்னை அயனாவரத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் பெற்றோரை இழந்து இளம்பெண் பரிதவித்த சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-11-15 10:20 GMT

மனைவி சாவு

சென்னை அயனாவரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தம்புசாமி (வயது 53). பிளம்பர். இவருடைய மனைவி பவானி (47). இவர், வீட்டு வேலைகள் செய்து வந்தார். இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் உள்ளார். இவர், பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

பவானி, நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசிக்கும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு அக்காள்-தங்கை இருவரும் வீட்டுக்கு நடந்து வந்தனர்.

அப்போது திடீரென பவானிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு பார்வதி அழைத்துச்சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கணவர் தற்கொலை

இதுபற்றி தகவல் அறிந்ததும் தம்புசாமி மற்றும் அவருடைய மகள் யுவஸ்ரீ இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பவானியின் உடலை பார்த்து இருவரும் கதறி அழுதனர்.

சிறிது நேரத்தில் தம்புசாமி அங்கிருந்து அமைதியாக விலகி சென்றுவிட்டார். தந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்த யுவஸ்ரீ, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து யுவஸ்ரீ, தனது தாயின் உடலை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் தந்தை தம்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பரிதவித்த மகள்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், தம்புசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே நாளில் தாய்-தந்தை இருவரையும் இழந்து பரிதவித்த யுவஸ்ரீ, தனது பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்