108 சிவனடியார்கள் கலந்து கொண்ட சிவ பூஜை
செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சிவனடியார்கள் கலந்து கொண்ட சிவ பூஜை
செஞ்சி
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சிறுகடம்பூர் பகுதியில் உள்ள பழமையான ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் சிவன் இரவு சிவபூஜை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி கந்தசாமி சிவாச்சியார், செஞ்சி பாஸ்கரன் சிவாச்சியார் ஆகியோர் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 221 சிவாலயங்களில் சிவபூஜை செய்துள்ள சிவனடியார்கள் 222-வது சிவ பூஜையை மேற்கொண்டனர். இதை திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் ஸ்ரீ சிதம்பரஈஸ்வரர் கோவில் ஆதீனம் கணேச சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார். பின்னர் உலக நன்மை வேண்டியும், அனைவரும் இன்புற்று வாழ வேண்டியும், மற்றும் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்ய வேண்டியும் கோமாதாபூஜை செய்து கோவில் எதிரே கொடி மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி தீபாராதனை செய்து நந்தி பகவான் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சிவனடியார்கள் கொண்டு வந்த சிவலிங்கம், நந்தி பகவான் சிலைகளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிவபுராணம் பாடல் பாடப்பட்டு மந்திரங்கள் ஓத மணி ஓசையுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காசி விஸ்வநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.