சிவசேனா கட்சி மாநில செயலாளர் உள்பட 2 பேர் கைது

பழனிசெட்டிபட்டியில் நன்கொடை கேட்டு மிரட்டிய சிவசேனா கட்சி மாநில செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-16 19:00 GMT

நன்கொடை கேட்டு மிரட்டல்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் ஒரு பெட்ரோல்விற்பனை நிலையம் உள்ளது. அதன் மேலாளராக பணியாற்றும் ஹரிங்டன் (வயது 23) பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பழனிசெட்டிபட்டியை சேர்ந்த நாட்ராயன் (41), ஸ்டாலின் (42), குரு அய்யப்பன் (48) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் தங்களை சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறி, கோவில் அன்னதானத்துக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடம் கேட்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் நான் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி என்னிடமும், பணியாளர்களிடமும் தகராறு செய்தனர். ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

2 பேர் கைது

அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து நாட்ராயன், ஸ்டாலின், குரு அய்யப்பன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குரு அய்யப்பன், ஸ்டாலின் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், குரு அய்யப்பன் சிவசேனா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். மற்ற இருவரும் அந்த கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே சிவசேனா கட்சியை சேர்ந்த நாட்ராயன் என்பவர், விற்பனை நிலைய ஊழியர்கள் தன்னை தாக்கி விட்டதாக பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவர் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்