நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கம்

நாகையிலிருந்து இலங்கைக்கு 2-வது நாளாக பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

Update: 2023-10-16 18:45 GMT

நாகையிலிருந்து இலங்கைக்கு 2-வது நாளாக பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

நாகை வந்த பயணிகள் கப்பல்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கியது. முதல் நாளில் நாகையிலிருந்து 50 பயணிகள் இலங்கைக்கு சென்றனர். அங்கு இந்திய பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நாள் மீண்டும் இலங்கையில் இருந்து கப்பலில் 30 பயணிகள் நாகைக்கு வந்தனர். அவர்களுக்கு நாகை துறைமுக அலுவலர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

2-வது நாளாக பயணம்

நேற்று 2-வது நாளாக நாகையிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சென்று வந்தது. 20 பயணிகளுடன் காலை 7 மணிக்கு நாகையிலிருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு இலங்கை காங்கேசந்துறையை சென்றடைந்தது.

மீண்டும் அங்கிருந்து 11.30 மணி அளவில் 20 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் மதியம் 3.15 மணியளவில் நாகை துறைமுகத்தை வந்தடைந்தது.

நாகையிலிருந்து இலங்கைக்கு சென்று வரும் பயணிகள் கப்பல் போக்குவரத்து வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடைபெறும். 24 மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும்.

23-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக 23-ந்தேதி வரை மட்டுமே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறும். வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு மீண்டும் ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாள்தோறும் நடக்கும் என்று நாகை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்