தெப்பக்குளம் வீதிக்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
பொள்ளாச்சி தேர்நிலை திடலில் ரூ.1½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் தெப்பக்குளம் வீதியில் உள்ள பள்ளி வளாகத்திற்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தேர்நிலை திடலில் ரூ.1½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் தெப்பக்குளம் வீதியில் உள்ள பள்ளி வளாகத்திற்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கடைகள் இடமாற்றம்
பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட், தேர்நிலை மற்றும் திரு.வி.க. மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. தேர்நிலை மார்க்கெட்டை தவிர மற்ற இரு மார்க்கெட்டிலும் பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. தேர்நிலை திடல் மார்க்கெட்டில் கடந்த 1971-ம் ஆண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. 52 ஆண்டுகள் ஆவதால் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி 60 கடைகள் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வியாபாரிகள் மார்க்கெட்டில் இருந்த கடைகளை காலி செய்தனர். இதன் காரணமாக தெப்பக்குளம் வீதியில் உள்ள பள்ளி வளாகத்திற்கு தேர்நிலை மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு சில கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கடைகளை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டம்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தேர்நிலை திடல் மார்க்கெட் தெப்பக்குளம் வீதியில் உள்ள பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய கட்டிடம் இடித்து அகற்றிய பிறகு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும். பணிகளை தொடங்கி 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளி வளாகத்திற்குள் போதிய இடவசதி இருப்பதால், மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தேர்நிலை திடலில் இருந்த காய்கறி மார்க்கெட் தெப்பக்குளம் வீதியில் உள்ள பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு பொதுமக்கள் மிகவும் குறைந்த அளவே காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு வருகின்றனர். விற்பனை இல்லாததால் மிகவும் சிரமத்தில் உள்ளோம். புதிதாக கடைகளை கட்டிடம் கட்டும் பணிகளை தாமதப்படுத்தாமல் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.