பெயர்ந்து விழும் கான்கிரீட்டுகள்... பீதியில் மக்கள்

கூடலூர் நகராட்சி வணிக வளாக கட்டிடம் பழுதடைந்து, திடீரென கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-01-21 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் நகராட்சி வணிக வளாக கட்டிடம் பழுதடைந்து, திடீரென கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பழுதடைந்த வணிக வளாகம்

தமிழகம், கர்நாடகா-கேரளா என 3 மாநிலங்கள் இணையும் நீலகிரி மாவட்டம் கூடலூர். கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் கேரளா, ஊட்டி, மைசூரு பகுதிக்கு செல்லும் 3 சாலைகள் உள்ளன. அங்கு நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடங்கள் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

மழை பெய்யும் சமயத்தில் வணிக வளாகங்களில் மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வணிக வளாக கட்டிடத்தில் உள்ள பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளதோடு, பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்தது. ஆனால், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, துணை தலைவர் சிவராஜ் உள்பட அதிகாரிகள் சேதமடைந்த இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வியாபாரிகள் அதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து புதிய வணிக வளாகம் கட்ட ரூ.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் உரிய நிதி ஒதுக்கியவுடன் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். பின்னர் வணிக வளாக கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால், பொதுமக்கள் நீண்ட நேரம் நின்று வேடிக்கை பார்க்க அனுமதிக்க கூடாது என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பொதுமக்களுக்கு தடை

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நகராட்சி வணிக வளாகம் முக்கிய இடத்தில் இருப்பதாலும், காந்திதிடல் அதே பகுதியில் உள்ளதால் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது ஏராளமான மக்கள் வணிக வளாக கட்டிடங்களில் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். தற்போது மிகவும் பழுதடைந்து உள்ளதால் வணிக வளாகங்களில் நீண்ட நேரம் நிற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்