300 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்து கல்லறையை இடமாற்றுவது ஏற்புடையது அல்ல - தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து
நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் 300 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்துக்கு கல்லறையை இடமாற்றுவது ஏற்புடையது அல்ல என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
பிரிட்டிஷ் காலத்து கல்லறை
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பழைய சட்டக்கல்லூரி கட்டிடம் அருகே கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் எலிஹூயேல் என்பவரின் மகன் டேவிட்யேல் மற்றும் எலிஹூயேலின் நண்பர் ஜோசப் ஹின்மெர்ஸ் ஆகியோரின் கல்லறை உள்ளது. இந்த கல்லறை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியவில்லை எனக்கூறி அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மனோகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 'ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கல்லறையை சுதந்திரத்துக்கு பிறகும் தொடர வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தொடர்வது அடிமை மனப்பான்மை இன்னும் அதிகாரிகளின் மனதில் இருந்து அகலவில்லை என்பதையே காட்டுகிறது' எனக்கூறி அந்த கல்லறையை வேறு இடத்துக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
அகற்ற எதிர்ப்பு
ஆனால் இந்த கல்லறை 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதால் இவற்றை அங்கிருந்து அகற்றக்கூடாது என தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
1670-ம் ஆண்டு எலிஹூயேல் தனது 21-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில் கிளார்க்காக பணியில் சேர்ந்தார். தனது நண்பரான கிழக்கிந்திய கம்பெனியின் துணை கவர்னராக இருந்த ஜோசப் ஹின்மெர்ஸ் இறந்து போன நிலையில் விதவையான அவரது மனைவி கேத்தரின் எல்போர்டை 1680-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன.
பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம்
இதில் ஒரு குழந்தையான டேவிட்யேல் 4 வயதே ஆன நிலையில் 1687-ம் ஆண்டு இறந்து போனது. இதைத்தொடர்ந்து கேத்தரின், குழந்தையின் உடலை தனது முதல் கணவரான ஜோசப் ஹின்மெர்சின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் அடக்கம் செய்தார். இதன்பின்பு 1684 மற்றும் 1688-ம் ஆண்டுகளுக்கு இடையே இங்கு கல்லறை கட்டப்பட்டது. 1921-ம் ஆண்டு இந்த கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது வரை அந்த கல்லறைகள் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
தவறான முன் உதாரணமாகும்
17-ம் நூற்றாண்டில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு அடுத்துள்ள கொய்யா தோட்டம் கல்லறை தோட்டமாக பயன்படுத்தப்பட்டது. இந்த கல்லறை தோட்டம் சட்டக்கல்லூரி இயங்கி வந்த இடம் வரை விரிவடைந்தது. 300 ஆண்டுகள் பழமையான இந்த கல்லறையை மாற்றுவது என்பது ஏற்புடையது அல்ல. சென்னை மற்றும் அதனை சுற்றி ஏராளமான நினைவு சின்னங்கள் இருந்து வரும் நிலையில் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு தவறான முன் உதாரணமாகி விடும்.
கல்லறையை அங்கிருந்து மாற்றாமல் அதன் அருகில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கோர்ட்டு அனுமதிக்கலாம். அமெரிக்காவில் எலிஹூயேல் பெயரில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.